கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Monday, December 20, 2010

சந்தியில் நடந்த கதை

இது!
சந்தியில் நடந்த கதை
சந்தியே சிரிந்த கதை.
கடலைக்கடந்து ‍ நாங்க‌
சிலோனுக்கு வந்த கதை,
மேடுபள்ளம் ஏறி நாங்க‌
வியர்வை சிந்தி உழைத்த கதை!

அரை வயிறு நிறையாம்
அல்லல்பட்டு வாழ்ந்த கதை,
இருட்டிலேயே எங்க வாழ்வு
இன்னும் இருக்கும் கதை.

துரைமார் எச்சரிக்க,
கங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,
குழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்
குலையாமல் உழைத்த கதை.

தேயிலை நட்டு வைத்து
தேகமெல்லாம் நொந்த கதை,
தேசம் உயர்ந்தாலும்
வேதனைகள் நிறைந்த கதை.

தலைவர் என்று சொன்னாலே
தலை சொறிந்து நின்ற கதை,
தண்ணியில மிதந்து
தத்தளித்து வாழ்த்த கதை.

அப்பன் ஆத்தா செத்த பின்னும்
அயராது உழைத்த கதை,
உறவுகளை புதைத்த மண்ணில்
ஏறி நாங்க மிதித்த கதை.
இந்தியாவுக்குத் தெரியாது
நாம் இங்கிருந்து சாகும் கதை,
இந்த இலட்சணத்தில்
இந்திய தமிழன் என்று சொன்ன கதை.
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
ஓடாகிப்போன கதை,
தலைவணங்கித் தலை வணங்கித்
தலைமுறையாய் நடந்த கதை.

விலைபோகா மனிதர் நாம்
வீதியிலே நின்ற கதை,
உழைப்பெல்லாம் உணர்வாக்கி
வீராப்பாய் இருந்த கதை.

லயம் லயமாய் மக்கள் வெள்ளம்
சந்தியிலே சேர்ந்த கதை,
சம்பளத்தை கூட்டச்சொல்லி
சத்தியாக்கிரகம் இருந்த கதை.

உறவுகள் பசித்திருக்க‌
உறுதியாய் நின்ற கதை,
உரிமை என்று கேட்டதை
உலகமே அறிஞ்ச கதை.

சம்பளத்தை எதிர்பார்த்து
சனமே வீதியில நின்ற கதை,
ஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு
த்லைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.

கிம்பளத்தை வாங்கிக்கிட்டு
சம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,
சரிதிரமே வாய்விட்டு அழுத போதும்
சரிங்க சாமி போட்ட கதை.

மல்லியப்பூச் சந்தியிலே
மக்கள் வெள்ளம் திரண்ட கதை,
தேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து
பரம்பரையாய்ச் செத்த கதை.

இது
சந்தியிலே நடந்த கதை
சந்தியே சிரிச்ச கதை,
சாமி எல்லாம் சேர்ந்து
நமக்கு சமாதி செஞ்ச கதை.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html


.