கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி
Showing posts with label சில முகங்களும் பல முகமூடிகளும். Show all posts
Showing posts with label சில முகங்களும் பல முகமூடிகளும். Show all posts

Monday, December 20, 2010

சந்தியில் நடந்த கதை

இது!
சந்தியில் நடந்த கதை
சந்தியே சிரிந்த கதை.
கடலைக்கடந்து ‍ நாங்க‌
சிலோனுக்கு வந்த கதை,
மேடுபள்ளம் ஏறி நாங்க‌
வியர்வை சிந்தி உழைத்த கதை!

அரை வயிறு நிறையாம்
அல்லல்பட்டு வாழ்ந்த கதை,
இருட்டிலேயே எங்க வாழ்வு
இன்னும் இருக்கும் கதை.

துரைமார் எச்சரிக்க,
கங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,
குழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்
குலையாமல் உழைத்த கதை.

தேயிலை நட்டு வைத்து
தேகமெல்லாம் நொந்த கதை,
தேசம் உயர்ந்தாலும்
வேதனைகள் நிறைந்த கதை.

தலைவர் என்று சொன்னாலே
தலை சொறிந்து நின்ற கதை,
தண்ணியில மிதந்து
தத்தளித்து வாழ்த்த கதை.

அப்பன் ஆத்தா செத்த பின்னும்
அயராது உழைத்த கதை,
உறவுகளை புதைத்த மண்ணில்
ஏறி நாங்க மிதித்த கதை.
இந்தியாவுக்குத் தெரியாது
நாம் இங்கிருந்து சாகும் கதை,
இந்த இலட்சணத்தில்
இந்திய தமிழன் என்று சொன்ன கதை.
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
ஓடாகிப்போன கதை,
தலைவணங்கித் தலை வணங்கித்
தலைமுறையாய் நடந்த கதை.

விலைபோகா மனிதர் நாம்
வீதியிலே நின்ற கதை,
உழைப்பெல்லாம் உணர்வாக்கி
வீராப்பாய் இருந்த கதை.

லயம் லயமாய் மக்கள் வெள்ளம்
சந்தியிலே சேர்ந்த கதை,
சம்பளத்தை கூட்டச்சொல்லி
சத்தியாக்கிரகம் இருந்த கதை.

உறவுகள் பசித்திருக்க‌
உறுதியாய் நின்ற கதை,
உரிமை என்று கேட்டதை
உலகமே அறிஞ்ச கதை.

சம்பளத்தை எதிர்பார்த்து
சனமே வீதியில நின்ற கதை,
ஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு
த்லைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.

கிம்பளத்தை வாங்கிக்கிட்டு
சம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,
சரிதிரமே வாய்விட்டு அழுத போதும்
சரிங்க சாமி போட்ட கதை.

மல்லியப்பூச் சந்தியிலே
மக்கள் வெள்ளம் திரண்ட கதை,
தேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து
பரம்பரையாய்ச் செத்த கதை.

இது
சந்தியிலே நடந்த கதை
சந்தியே சிரிச்ச கதை,
சாமி எல்லாம் சேர்ந்து
நமக்கு சமாதி செஞ்ச கதை.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html


Thursday, March 5, 2009

முரண்களின் முகவரி

கொள்ளைக்காரனிடம்
தப்பி வந்து
காக்கிச்சட்டையிடம்
பறிகொடுக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வயிற்றுப் பிழைப்பிற்காய்
வெளிநாடு சென்று
வயிறு சுமந்து வரும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

காமுகனிடம்
தப்பித்து
காதலனிடம் கற்பிழக்கும் நீ!

~~~~~~~~~~~~~~~~~~

வறுமைக் கோட்டை கடக்க‌
ஆயுள் ரேகை அழிய‌
உழைத்து உயராத நீ!

~~~~~~~~~~~~~~~~~~

நீ என்ன‌
முரண்களின் முகவரியா?
யார் யாரையோ
குளிர்ச்சிப்படுத்தும்
கவரியா?

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Wednesday, January 28, 2009

கட்டபொம்மன்

தூக்குக் கயிற்றை
நீ வீரத்தோடு முத்தமிட்டாய்
தூக்குக் கயிறே
துக்கக் கயிறானது அன்றுதான்!!

தன் மயிருக்காக‌
பிச்சையேந்தி பலர் நின்றபோது
தன் உயிருக்காகக் கூட‌
அடங்கிபோகாத வீரன் நீ!

உன் குரலில் ஒலித்த ஒலி
உன் சுவாசக்காற்றல்ல
மக்களின் மூச்சுக்காற்று!

வெள்ளைக் கழுகளுக்கு
சேவகம் செய்த‌
நரிகளுக்கு மத்தியில்
வீரத்தோடு கர்ஜித்தவனே!

அது எப்படி முடிந்தது உன்னால்?
எல்லோருக்குமாக சுவாசிக்க,
எல்லோருக்குமாகவும் இறக்க,
இறந்தும் இறவாமல் இருக்க!

எல்லோருக்குமாக சுவாசித்தவன் நீ
எல்லோரும் சுவாசித்தார்கள் உன்னை.

தோள் பிடித்து, கால் பிடித்து,
சிம்மாசனக் கால்களுக்குக் கீழ்
எலும்புதுண்டுகளையாய்
காத்து கிடந்த எட்டயப்பர்கள்
உன்னை பார்த்துக் குரைத்தபோது
உன் வீரத்தால் அவர்களை முறைத்தாய்.

தூக்குக் கயிற்றில் தொங்கியது
உன் தலையல்ல.
ஒரு சமூகத்தின் விலை!
எங்களுக்கு விட்டுசென்ற‌
புரட்சி எனும் கலை!!!!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Wednesday, December 31, 2008

ஏழை

எதிர்காலத்தின் மீது
ஏற்பட்ட நம்பிக்கையீனமும்,

நிகழ்காலத்தின் மீது
ஏற்பட்ட பயமும்,

இறந்தகாலம் தந்த வடுவும்
என் முக்காலமும்,

உழைப்பின் மீதேறி
உச்சாடனம் புரிந்து,
அற்ப ஆசையிலேயே
எங்கள் ஆயுள் முடிந்து போவதால்,
நீங்கள் வாழும்
சொர்க வாழ்வை
நாங்கள் எப்போது வாழ்வது!

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Monday, December 29, 2008

ஆயுத பூஜை



தொலைக்காட்சி எங்கும்
மரணங்களின் ஓலங்கள்.
பத்திரிக்கை முழுதும்
உயிர் தொலைத்த முகங்கள்.
தாயே தன் குழந்தைகளை
தாலாட்டிக் கொல்வதா?

குண்டு மாரி பொழிந்து,
உண்டான் பள்ளங்களில்
திரண்டது குருதி.
இறந்த தாயின் முலைப்பால் அருந்தி
அழும் பிள்ளை
வடிந்த இரத்ததை பாலாய் நினத்து
சுவைப்பருகும் குழந்தை.
புதைந்த புதுக் கணவனை
புதைக்ழியில் தேடும் பெண்.
எஜமான் உடல்தேடி
அலையும் விசுவாசமுள்ள நாய்.

அம்மா என்ற அழுக்குரலுக்கு
தாயில்லா வேதனை
அம்மா அழுகின்றபோது
குழந்தையில்லாச் சோதனை.
இத்தனை உயிர்களை கொன்று
புரட்சி ந்டத்த‌
உனக்கென்ன ஆசை?
தாயே! ஆயுத பூசை.

நீ துப்பிய எச்சில்
பராயம் அறியாத பாலகர்கள்,
தாய்மை அடைந்த தாய்கள்,
பருவம் சுமந்த மங்கைகள்,
கனவு மணக்கும் கன்னிகள்,
பாவம் பாமரர்கள்,
தானியம் சுமக்கும் பூமிகள் என‌
அவித்த முட்டயாய்
பரம்பரை
அழிந்துவிட்டதை அறிவாயா?

கரம் இழ்ந்த உயிர்கள்,
கால் இழந்த உடல்கள்,
ஒட்டியிருந்த உயிரை
விடைகொடுத்து அனுப்பும்
விழுந்த செல்கள்.

உயிரற்ற குழந்தயாய்
அணைத்தபடி உயிர்கரைய‌
மூத்த பிள்ளையேத்
தேடும் தாய்.

மண்ணுக்குள் ஒலி வரும்
தேண்டினால் உடல் வரும்.
அன்னையின் வயிற்றில் குழந்தை
ஓர் உடலில் ஈருயிர் மரணம்.

வேட்டை நாயின்
வாயில் சிக்கிய‌
வீட்டுக்க்ருவியாய்
பாவம் மனிதர்கள்.

ஆயுதமே!
உன் ஒவ்வொரு உற்பத்தியும்
மரணங்களையே
விலை கேட்கிறது.

விரலின் விசையில்
தெறித்த குண்டுகள்
பேயாய் தலைவிரிதாடியது.
சிலமணிநேரம் மனிதவேட்டை,
தரைமட்டமாகியது
கட்டிய கோட்டை.

நீ அராஜகக் கோட்டையே
உடைத்திருத்தல் மகிழ்ந்திருப்போம்
அமைதி கோபுரத்தை அழித்ததென்ன?

உன் பசியைப் போக்க
எம் உயிரை ருசிப்பார்த்தாய்.

எங்கோ உற்பத்தி செய்வதற்காய்
இங்கே ஏன் வெடிக்கிறாய்?
இரத்தம் குடிகிறாய்?

உனக்கு சந்தை வேண்டும்
என்பதற்காய்
நாங்கள் சவமாவதா?

உன் கழுகுப் பார்வையில்
எங்கள் எளிமை தேசம்
கவலைக்கிடமாய்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html





Sunday, December 28, 2008

வண்ண மீன்கள்

ஆளுயரக் கண்ணாடி,
வண்ண வண்ணக்
கற்களும், சிற்பிகளும்,
குமிழிகளாக மேல் எழும்
பிராணவாயுக்கள்.
செயற்க்கையாய் ஆடும் பொம்மை,
மங்கிய வெளிச்சத்தில்
அழகான் கண்ணாடி பெட்டியில்
ஆயுள் கைத்தியாய்
அடைக்கப்பட்ட‌
அழகான் மீன்கள் நாம்.

வயிற்றுக்கு உணவாகும்
எம்மில் பல.
பார்வைக்கு உணவாகும்
எம்போல் சில.

தங்கச் சிறையில் அடைத்த‌
தங்க மீன்கள் நாம்.
சாக்கடையில் கிடந்தாலும்,
சுதந்திரமாய் இருந்தோம்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Sunday, December 21, 2008

நிஜம்

காகங்களுக்கு பட்டுக்குஞ்சம்
நீங்கள் கட்டிவிட்டதால்
அவை குயில்கள் என்று
ஊரெல்லாம் கூறித்திரிகின்றன.

நரிகளுக்கு நாட்டுச்சாயம்
நீங்கள் பூசிவிட்டதால்
அவை சிங்கங்கள் என்று
சிங்காரித்து திரிகின்றன.

குயில்கள்,
மெளனம் கலைத்து
கூவத்தொடங்கினால்!
சிங்கங்கள்,
சிலிர்த்து கர்ஜிக்கத் தொடங்கினால்!

முணுமுணுக்ககூட முடியாமல்
மூலையில் முடங்கிப் போவீர்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Saturday, December 20, 2008

எதற்காகவோ!

வறுமை வாட்டினாலும் ‍ சில‌
வரிகள் படித்து வைத்தோம்.
வரிகள் படித்துவைத்ததெல்லாம்
வளைந்து கொடுப்பதற்கோ!

பாடுகள் பல் பட்டும் பல‌
பாட்டுக்கள் கோர்த்து வைத்தோம்.
பாட்டுக்கள் கோர்த்து வைத்ததெல்லாம்
பாடையில் வைப்பதற்கோ!

ஏழ்மை தரித்திரத்திலும் சில‌
ஏட்டை எழுதுவித்ததெல்லாம்
ஏட்டுச்சுரக்காடய் ஆவதற்கோ!

பூ மாலை சாந்தி புரியாத பல‌
பூசைகள் செய்து வந்தோம்.
பூசைகள் செய்துவந்ததெல்லாம்
பூசாரி வாழ்வதற்க்கோ!

சக்கையாய் போனாலும் சில‌
சாப்தம் தேயிலைக்கே சந்தாகிப் போனோம்.
சத்தாகிப் போனதெல்லாம்
சந்தியாகி சாவதற்கோ!

இதுவோ! எம்விதி ?
இல்லை இல்லை
இது எமக்கான் சதி
இனியும் பொறுக்காது பொறுத்தால்!
இம்மண்ணே நிலைக்காது.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

Friday, December 19, 2008

பாழான நாள்

ரணமாய் வலிக்குது உடம்பு,
தறிக்கெட்டு ஓடுது மனது,
ஏன் எனக் கேட்டது அறிவு,
விதி என்று சொல்லுது உறவு.

இரத்தத்தில் சிவக்குது பூமி,
சித்தத்தில் கலங்குது உறுதி,
மொத்தத்தில் எழுகிறது இறுதி.

ஆள் ஒன்றுசேர்கின்றனர் தானாய்,
தாள் பற்றி உழைக்கின்றனர் மாடாய்,
மீள் எழ நினைக்கின்றனர் மேலாய்,
நாள் ஒன்று கரையுது பாழாய்.


திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

Wednesday, December 17, 2008

யார் யாரோ ஏவலில்

என் கால்கள்,
ஓடிக்கொண்டேயிருக்கிறது
ஒரு ஓட்டப்பந்தைய வீரனின்
வேகத்தைப் போல்!

என் கைகள்,
எழுதிக்கொண்டேயிருகிறது
ஒரு பரீட்சாத்தியின்
ப்ரீட்சையைப் போல!

என் மனம்,
தேடிக்கொண்டேயிருக்கிறது
ஒரு தாயின்
பாசத்தைப் போல!

என் மூளை,
சிந்தித்துக்கொண்டேயிருகிறது
ஒரு விஞ்ஞானியின்
புதிய கண்டுபிடிப்புப்போல!

என் உடல்,
உழைத்துக்கொண்டேயிருக்கின்றது
ஒரு இயந்திரத்தின்
சக்கரத்தைப் போல!

என் கால்களும், கைகளும்,
மனமும், மூளையும், உடலும்
ஓய்வின்றி இயங்கிக்கொண்டேயிருகின்றது
யார் யாரோ ஏவலில் மரணம் வரை'....

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

Sunday, December 7, 2008

தமிழ்

தமிழோடு நாம் கொண்ட மேகம்
எந்த ஜென்மதிலும் தீராத தாகம்
தீ வந்து உடல் சுட்ட போதும்
வேகாது வேகாது தமிழ் தேகம்

தமிழே எம் உயிரின் பாகம்
தமிழின்றி கண்டதில்லை ஒரு வேதம்
தமிழால் வாழ்வது ஒரு யோகம்
தமிழுக்காய் வாழ்வதே யாகம்

தமிழுக்கே இழுக்கென்றால் உள்ளம் நோகும்
தமிழுக்கெனின் என் உயிர் போகும்
சங்கம் வளர்த்தத் தமிழ் உலகை ஆளும்
அங்கமெல்லாம் தமிழ் என்றே ஓதும்

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Saturday, November 29, 2008

தேயிலைச் செடி

என் தாத்தா சொன்னார்,
இது தான் நாங்கள்
காடுகள் வெட்டி, கழனியாக்கி
தேயிலைச்செடிகள் நட்ட இடம்.

என் அப்பா சொன்னார்,
இது தான் நாங்கள்
தேயிலை பறித்து
தேகம் நொந்த இடம்.

நான் சொன்னேன்,
இதுதான்
தேயிலைச் செடிகள்
இருந்த இடம்.

என் மகன் சொன்னான்,
இது தான்
தேயிலை என்ற செடிகள்
இருந்த இடம்.

என் பேரன் சொன்னான்,
இங்கு தான்
தேயிலை என்றொரு
செடி இருந்ததாம்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html


விசித்திர உலகம்

நான் பாவங்களை கழுவ‌
நீர் கொடுக்கின்றேன்.
நீங்களோ!
சாக்கடை என்கிறீர்கள்.

அவர்கள் குடிக்கச்
சாக்கடை நீர் த்ருகின்றார்கள்.
நீங்களோ!
தேவாமிர்தம் என்கிறீர்கள்.

நான் அநீதிக்கு கோபம் கொண்டு
உங்களைத் தூண்டுகிறேன்.
நீங்களோ!
அராஜகம் என்கிறீர்கள்.

அவர்கள் அநீதியை ஆதரித்து
பலர் கால்களைப் பிடிக்கின்றார்கள்.
நீங்களோ!
அகிம்சை என்கிறீர்கள்.

இது விசித்திர உலகம்!
நீயாங்களுக்குத் தண்டனையும்,
அநீயாயங்களுக்கு
பதவியும் கொடுக்கின்றது.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Thursday, November 13, 2008

சிறகுகள்

அசைய மறுத்தால்
சிறகுகள் இல்லை!
இசைய மறுத்தால்
மாற்றம் இல்லை!
வளர மறுத்தால்
உயர்ச்சி இல்லை!
முட்டையை உடைக்க‌
மறுத்தால்
குஞ்சுகள் இல்லை.
முக்காடுகளின் முணுமுணுப்பு
இனியேனும் முடியட்டும்.
உங்கள் சிந்தனை பட்டே
சிறைக்கம்பிகள் உடையட்டும்
பொழுது இனி உங்களுக்கும்
சேர்ந்தே விடியட்டும்.
உங்கள் சிறகுகள்
கிழக்கு நோக்கியே விரியட்டும்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Tuesday, November 11, 2008

ஒரு நாள் கழிந்தது

கண்களை கசக்கி,
கால்களை நீட்டி,
உடம்பை வளைத்து,
கைகளை முறித்து,
காலை விடிந்தது
வழ‌க்கமாய் வெளிச்சமாய்!

உழைத்தேம்!
உருகினோம்!
உருக்குலைந்தோம்!

கண்களை மூடி,
கால்களை மடக்கி,
உடம்பை நீட்டி,
கைகள் சோர்ந்து
இந்த இரவும் துயின்றது
இருட்டாய் மிக இருட்டாய்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
http://ckalaikumar.blogspot.com/2008/11/blog-post_09.html

Monday, November 10, 2008

என்ன மனிதர் இவர்

என்ன நீதி இது?
கள்வர்களை விட்டு விட்டு
காவலர்களை கைது செய்கிறார்கள்.

என்ன பெண்மை இது?
பூக்களை விட்டு விட்டு
முட்களைப் பறிக்கிறார்கள்.

என்ன காதலர் இவர்கள்?
காதலியை(லனை) விட்டு விட்டு
காதலை மட்டும் நேசிக்கின்றார்கள்.

என்ன தேனீக்கள் இவைகள்?
பூக்களை விட்டு விட்டு
சாக்கடைகளைச் சுற்றுகின்றது.

என்ன மனிதர் இவர்கள்?
நீதியை விட்டு விட்டு
அநீதியையே ஆதரிக்கின்றனர்.

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.
.