என் மனதுள் நுழைய
முனைந்து முனைந்து என்னால்
வுpரட்டப்படாமல்
வாசலில் நிற்பவனே!!
உனது அன்பின் ஆழம்
மாவலி கங்கையின் நீளத்திலும்
நீளமானது
அறிவேன் நன்கு.
என் விழிகளில் விழிநுழைத்து
முகம் புகழ்ந்து
பருவத்தின் மீது புராணம் பாடி
பாதசுவடுகளின் மீதுலவுகிறாய்
என் செய்வேன்?
உன் மீது
பரிதாபம் மட்டுமே பட முடிகிறது
உலகம் நானென்கிறாய் உலக
விந்தை நானென்கிறாய்
கவிதைகளும் காட்சிகளும்
அனைத்தின்பமும் நானென்கிறாய்
எத்தனைப் பொய்!!!
பகலின் இரவுகளில் நாடு கடத்தப்பட்டு
காடுகளின்
சுதந்தர சிறைகளில்
மனித இயந்திரங்களாய்
இருநூறாண்டுகள்
இருளுக்குள் உழலும் மக்கள்
கூட்டத்திலிருந்து
எழுந்து வந்தவன் நீ
நினைவுகளை ஞாபகத்திற்கழை.
எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்தி
உழைத்து மரிக்கும்
அறியாமைகளுக்கு
உiiவிட்டால் ஒளிப்பிழம்பு யார்?
உலக விழிகளால்
மறுதலிக்கப்பட்ட் அந்த உலகம்
உன்னிடம் எதையெதையோ
பார்த்திருக்கிறது!!!
அதன்
காய்ந்து
வறண்ட தொண்டைகளில்
தாகம் ஏக்கம்
பசி கனவு!
விழிகளுக்கு மிக அருகாமையில்
விழித்து நிற்கும்
பொறுப்புக்கள் கடமைகள் துறந்து
மேல் வர்க்க இளைஞனாய்
வாலிபத்தை
சல்லாபத்தி விடுகிறாய்.
எத்தனை துயரேற்றாள்
உன் தாய் உனை ஈன்;: உனை வளர்க்க??
எத்தனை இடர் கடந்தார்
உன் தந்தை நீ பள்ளி செல்ல??
எத்தனை துன்பமுற்ற
மக்கள் கூட்டம் உன் மண்ணில்??
விருப்பமில்லா விடுமுறையில் உன்
ஏழையூர் விரைகையில்
;அம்மனிதரின் விழிகளில்
இல்லாமையும் இயலாமையும்
இணைத்திசைக்கும்
துயர கீதங்களை
கேட்டிருக்கிறாயா?
ஒழுகும் கூரைகளின் கீழ்
உறக்கங்களை வழிய விட்ட
இரவுகளின் அழுகையொலிகள்
எட்டியிருக்கறதா செவிகளுக்கு?
பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்
தாழ்வுடைய வறண்ட வாழ்வின்
சுமைகளை
தராசிலிட்டிருக்கிறாயா?
இனத்தால் பொருளால்
சாதியால் நிறத்தால் விலக்கப்பட்டவர்களுக்கு
விடுதலைக்காய் முழங்கப்போகும்
குரல் யாருடையது??
பரம்பரையை பரிசளித்து வளர்த்த
மண்ணை மூழ்கடிக்கும்
அதிகாரங்களுக்கெதிராய்
நிமிர்வது யார்??
விடைகாணா வினாக்கள்
ஆயிரமிருக்க நீயோ…..
வலிமையை இளமையை
என் நடை பாதையெங்கும்
பூக்கள் விரிக்க சிந்திக் கொண்டிருக்கிறய்…
இளமையின் சுகிப்பை வியர்வையூரிய
கருப்பு மண்
தந்த எழுத்துக்களால் அலங்காரப்படுத்துகிறாய்.
எப்போது அவர்களின்
அழுகை தடுக்கும்
ஆயுதம் செய்ய உன் அறிவை
கருவாக்கப் போகிறாய்???
இங்கு உன்னையும் என்னையும்
இணைத்த இப்பெரும் அறிவாலயம்
மனிதர்களுக்கான மனிதர்களை
உரு செய்யவே உழைக்கிறது.
இங்கு மனிதனாவது சாதரணம்!
மனிதர்களுக்கான மனிதராவதே சாகாவரம்.
நீ
சாகாவரம் பெறு அப்போது
உன் காதல்
மறுபரிசீலனைக்குற்படலாம்!!
ஏனெனில்
நான் நம் மண்ணையும் மக்களையே
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
எஸ்தர் லோகநாதன் (பேராதனை பல்கழைக்கழகம் இலங்கை)
திருகோணமலை
6 comments:
நீண்ட நாளைக்கு அப்பபுறம் பதிவுலகில் உங்களை பார்க்கிறேன்
தொடர்ந்து எழுதுங்கள்
எங்கையா போயிருந்தீங்க இவ்வளவு நாளும்
தொடர்ந்து எழுதுங்கள் கலை
வணக்கம் நண்பரே...
வணக்கம் கலை! என்ன கன நாளைக்கப்புறம்? வருக வருக...! இன்னும் நிறையப் பதிவுகள் எமது உள்ளம் குளிரும் வண்ணம் தருக!
யோ வொய்ஸ் (யோகா) , தர்ஷன், ஆ.ஞானசேகரன் , கமல்
நன்றிகள் நண்பர்களே
வார்த்தைகளின் வித்தை அருமை. வாழ்த்துக்கள் லோகநாதன்
Post a Comment