
எனது பிறந்த நாளை இலங்கையில் தமிழ் மொழி பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள் என தனது ரசிகர்களுக்கு நடிகர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய இயக்கச் சகோரதர்களுக்கு வணக்கம்.
நவம்பர் 7ம் தேதியை என் பிறந்த நாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும், பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளையில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.
10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம் இன்னும் முழுமை பெறாத நிர்மாணப் பணி. அதற்குப் பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம்.
மத, ஜாதி, இன, மொழி, நிற வேறுபாடுகளைக் கூறி நம் இனத்தையே கூறுபோட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்து விட்டது.
அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழ்ந்த அவலம்தான் ஈழப் போரும் கூட. இலங்கை நமது அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்தக் கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது.
இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை. மனிதனே மனி தனைக் கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.
இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.
இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில், நம் வீட்டில் குதூகலக் கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இராது.
வழக்கமாக நான் பிறந்ததைக் கொண்டாடும் இத்தினத்தை நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே, இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள்.
இறந்தவருக்கு இரங்கல் சொல்லும் நாளாகச் செலவிடுங்கள்.
நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று, இதுவாகவும் இருப்பின் பெருமை கொள்வேன் என்று கூறியுள்ளார் கமல்.
நன்றி தட்ஸ் டேமில்.கொம்
No comments:
Post a Comment