

உலகை துன்பத்திற்குள்ளாக்கும் தொற்று நோய்களுள் ஒன்றாக மாறியுள்ள எச்.ஐ.வி/எய்ட்ஸ் தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் முதலாம் திகதி நினைவு கூரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எச்.ஐ.வி./எயிட்ஸ் பற்றிய சில அவதானிப்புகளை நோக்குவோம்.
வரலாறு
எய்ட்ஸ் நோய் ஆரம்பத்தில் அமெரிக்காவில் இனங் காணப்பட்டது.1981 ஆம் ஆண்டு லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சில வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற இளவயது ஆண் நோயாளிகள் சிலரின் உடல் நோய் எதிர்ப்பு தொகுதி சேதமடைந்தமையால் ஏற்பட்ட நோய்க்கான குறிகள் பற்றி மேலதிகமாக ஆராய முற்பட்டபோதே இது இனங்காணப்பட்டது.
சிகிச்சை பெற வந்தவர்கள் தன்னின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் என்ற விடயம் அவர்களின் நடத்தை பற்றி அணுகியபோது தெரிய வந்தது. இந் நோய் ஒரு வித வைரஸ் காரணமாகவே ஏற்பட்டுள்ளதுடன், அதுவே எச்.ஐ.வி யென பெயிரிடப்பட்டது. இந் நோய் நிலைமைக்கு பல பெயர்கள் முன்வைக்கப்பட்டாலும் இறுதியில் எய்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது. AIDS stands for Acquired Immune Deficiency Syndrome
1983 ல் பிரான்ஸ் நாட்டின் லூயிபாஸ் அடர் நிலையத்தின் விஞ்ஞானி லூக் மொங்ண்டிக்கயர் மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ரொபர்ட் கலோ ஆகியோர் நடத்திய ஆராய்ச்சிகளின் போது எச்.ஐ.வி.வைரஸ் முதன் முதலாக இனங்காணப்பட்டது.
HIV, the Human Immunodeficiency Virus
ரெட்ரோ வைரஸ் வகையில் அடங்கும் இது இலத்திரனியல் நுணுக்குக்காட்டி மூலமே பார்க்கக் கூடிய மிகச் சிறிய நுண்ணங்கியாகும். இவ் வைரஸின் கரு பரம்பரையலகுப் பகுதிகளை கொண்டதாகும். இனப் பெருக்கத்திற்காக இவை உயிருள்ள மனிதக் கலங்களுடன் சேர வேண்டியது அவசியமாகும்.
தற்போது வரை வைரஸ் 2 வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இருவகை வைரஸ்களினாலும் எய்ட்ஸ் உருவாகும். பிந்திய கண்டு பிடிப்புகளின்படி மனிதனுக்கு பச்சை நிற குரங்குகளிலிருந்தே இது தொற்றியிருக்கலாமென அறியப்பட்டுள்ளது.
ஆபிரிக்க பழங்குடி மக்கள் இவ்வகை குரங்கின் இறைச்சியையும், இரத்தத்தையும் அப்படியே உட்கொண்டதால், இந்த வைரஸ் மனித உடலினுள் புகுந்து பல மாற்றங்களுக்கு உட்பட்டு எச்.ஐ.வி./எய்ட்ஸ் தோற்றம் பெற்றிருக்கலாமென்ற ஒருவாதமுள்ளது.
இவ்வகை வைரஸ் எல்லா இடங்களிலும் உயிர் வாழ முடியாது. அது உயிர் வாழ உயிர்கலங்கள் தேவை. எனவே தொற்றுக்குள்ளான ஒருவரின் உடலினுள் மாத்திரமே இவ் வைரஸ் உயிர் வாழும். தொற்றுக்குள்ளானவர்களின் இரத்தத்தில் இவ் வைரஸ் பெருமளவில் காணப்படும். குறிப்பாக, ஆண்களின் சுக்கிலப் பாயத்திலும் பெண்களின் யோனி மடற்சுரப்பிலும் கருப்பை கழுத்துச் சுரப்பிலும் தாய்பாலிலும் இவ் வைரஸ் காணப்படும்.எனினும், சிறுநீர், மலம், உமிழ்நீர்,வியர்வை மற்றும் கண்ணீர் ஆகியவற்றிலும் இவ்வைரஸ் குறைந்தளவில் காணப்படும்.
எச்.ஐ.வி.பரவும் வழி வகைகள்
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் பாலுறவுச் சுரப்பிகளில் இவ் வைரஸ் அதிகம் காணப்படும். பாலியல் தொடர்பு பாதுகாப்பற்றதாக மாறும் போதே, இது உருவாகும். எச்.ஐ.வி.தொற்றில் மிக அதிகமானவை பாலியல் தொடர்பினாலே ஏற்படுகிறது.
எச்.ஐ.வி தொற்றடைந்த இரத்தத்தை பிறருக்கு செலுத்துவதாலும், தொற்றடைந்த இரத்தம் மூலம், மாசடைந்த ஊசி, கிருமியழிக்காத மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றாலும் இவ் வைரஸ் ஏற்படும். தொற்றடைந்தவரின் உடல் அவயங்கள் பிறிதொரு மனிதனுக்கு பொருத்தப்படும் போதும் இவ் வைரஸ் தொற்று ஏற்படும்.
எச்.ஐ.வி உள்ள பெண் கருத்தரிப்பதன் மூலம் சிசுவிற்கும் வைரஸ் தொற்று ஏற்படும். சிசு கருவில் உள்ள வேளையும், பிரசவ சமயமும் வைரஸ் தொற்று உருவாகலாம்.
எச்.ஐ.வி வைரஸானது எவரையும் தாக்கும். அதாவது சிறுவர், பெரியவர்,இனம், மதம், சமூக அந்தஸ்து என்றெல்லாம் இதற்கு பாகுபாடு கிடையாது.
விபசார தொழிலில் ஈடுபடும் ஆண்,பெண் பலருடன் பாலியல் உறவு வைத்திருப்போர். தன்னின சேர்க்கையில் ஈடுபடுவோர், பாலுறுப்புகளில் காயங்களை கொண்டுள்ளோர் மற்றும் போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றுவோருக்கும் கூட எச்.ஐ.வி தொற்று மிக அதிகளவில் ஏற்படுகிறது.
இலங்கையில் எச்.ஐ.வி
1986 ஆம் ஆண்டு இலங்கையில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி பதிவானார். இவரொரு வெளிநாட்டுக்காரர். எனினும் எய்ட்ஸ் பீடித்த முதலாவது இலங்கையர் 1987 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டார்.
எச்.ஐ.வி. தொற்றாத சந்தர்ப்பங்கள்
எச்.ஐ.வி. தொற்றுள்ள ஒருவருடன் சாதாரணமாக பழகுவதன் மூலம் இது நமக்கு தொற்றி விடாது. இத் தொற்றுள்ளவருடன் அருகில் படுத்துறங்கவோ, தோளில் கைபோடவோ, அல்லது கூட்டாக வேலை செய்யவோ நாம் அச்சப்படதேவையில்லை.
குறிப்பாக தும்மல், இருமல் மூலம், விளையாடுவதால் கைகுலுக்கி, தொட்டு உறவாடுவதால் தொற்றுக்குள்ளானவர் குளித்த நீர்த்தடாகத்தில் குளிப்பதால், நுளம்பு மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஒருவரிடமிருந்து ஒருவர் எச்.ஐ.வி தொற்றி விடுவதில்லை.
எச்.ஐ.வி.யும் இரத்த பரிசோதனையும்
இத் தொற்றுக்கு உள்ளானவர் நீண்ட காலம் செல்லும்வரை எவ்வித நோய்குறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. எனவே, வெளித் தெரியும் அடையாளங்களை கொண்டு இதன் தொற்றுக்குள்ளானவரை கண்டு பிடித்துவிட முடியாது. இதனை அடையாளம் காண சிறந்த முறை இரத்தத்திலுள்ள எச்.ஐ.வி. பிறபொருளெதிரிகளை அடையாளம் காணுவதாகும். இதற்கு 2 வகை பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
1)ELISA
இது முதலாவது செய்யப்படும் இரத்தப் பரிசோதனையாகும். இதனை `அடையாளங்காணல் சோதனை' என்றழைப்பர். இச்சோதனையானது எச்.ஐ.வி தொற்றல்லாத பிறகாரணிகள் தொடர்பிலும் நேர்வகைபெறுபேற்றை தரலாம்.
2)WESTERN
இப்பரிசோதனை ஒரு உறுதிப்படுத்தல் பரிசோதனையாகும். எலைசா பரிசோதனை நேர்வகைப் பெறுபேற்றைக் காட்டும் ஒவ்வொரு குருதி மாதிரியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதுவோர் சிறப்பான முறையெனப்படுகிறது.
எலிசா மற்றும் வெஸ்டர்ன் ஆகிய 2 பரிசோதனைகளிலும் வகைப்பெறு பேறு காட்டப்பட்டால் எச்.ஐ.வி பிறபொருளெதிரி உண்டு என்பது அல்லது எச்.ஐ.வி. உருவாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்தலாம்.
இதேவேளை, எச்.ஐ.வி. குருதிப் பரிசோதனையை தமது பாலியல் நடத்தையில் சந்தேகம் உள்ளோர். எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் அபிப்பிராயப்பட்டால், பிறருக்கு பயன்படுத்தப்படும் குருதி மாதிரி ஒவ்வொன்றிலும் எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என அறிய விரும்புவோரும் எச்.ஐ.வி. குருதிப் பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
எய்ட்ஸ் நோயின் அடையாளங்கள்
உடல் நிறை குறைவடைந்து ஒரு மாத காலத்துள் உடல்நிறை 10 சதவீதமாக குறைவடையும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து வயிற்றோட்டமும், காய்ச்சலு ம் நீடிக்கும்.
எயிட்ஸின் ஏனைய சிறு அடையாளங்களாக களைப்பு, இருமல், கைகால் வலி, அதிகம் வியர்த்தல் மற்றும் சரும நோய்கள் உருவாகுவதை குறிப்பிடலாம்.
இதேவேளை, எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளானவரின் நோய் எதிர்ப்புச் சக்தி தொகுதி இக்காலப் பகுதியில் பெருமளவு அழிக்கப்பட்டுவிடுவதால் அவரை பல தொற்று நோய்கள் பீடிக்கும். வைரஸ், பற்றீரியா, பங்கஸ் போன்ற தொற்றுகள் ஏற்படும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படும் சிறுநோய்கள் கூட மரணத்தை ஏற்படுத்திவிடும்.
எச்.ஐ.வி. தொற்றும், சிகிச்சை முறையும்
எச்.ஐ.வி. தொற்றை முற்றாக குணமாக்கும் மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், தற்போது எச்.ஐ.வி. தாக்கத்தை குறைக்கச் செய்யும் ANTIRETEOVIRAL மருந்துகள் பாவனையில் உள்ளது.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர் இம்மருந்துகளை தொடர்ந்து பாவிப்பது கட்டாயமாகும்.
இவற்றுடன் NUCLEOSIDE ANALOGUES, NON NUCLEOSIDE REVERSESE, TRANCRIPTASE INHIBITRORS மற்றும் PROTESE INHIBITORS ஆகிய மருந்துகளும் எச்.ஐ.வி. தொற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. இம்மருந்துகள் சில சந்தர்ப்பங்களில் பக்க விளைவை ஏற்படுத்தத்தக்கதாகும்.
இதேவேளை, எச்.ஐ.வி. பிரதான மூன்று வழிகளில் பரவுகிறது.
[]பாலியல் தொடர்புகள் மூலமாகவே 80 சதவீதத்திற்கும் மேலாகப் பரவுகிறது.
[]அத்துடன் குருதி, தோலைத் துளைப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும்
[]தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுகிறது.
முன்னைய காலத்தில் அதாவது எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் ஆண்களே இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகினர். எனினும், தற்போது ஆண், பெண் இருபாலாரும் சமஅளவு இதன் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். உயிரியல் இயல்புகளின் படி பெண்களே வைரஸ் தொற்றுக்கு அதிகம் உள்ளாகின்றனர்.
பெண்ணுக்கு ஏற்படும் எச்.ஐ.வி. தொற்றானது குடும்ப அமைப்பிலும், சமூகத்திலும் பல சிக்கல்களை உருவாக்குகிறது. இதனால், தாயும் தந்தையும் மரணிக்கும் போது அக்குழந்தை அநாதையாகிறது. இதுவே இன்றைய ஐரோப்பா எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலாகும்.
எச்.ஐ.வி. தொற்றுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்றும் அபாயமுமுள்ளது. குறிப்பாக பாலூட்டுவதன் மூலம் இது ஏற்படுகிறது. எனவே, எச்.ஐ.வி. தொற்றுள்ள தாய் இதில் மிகுந்த அவதானம் செலுத்துதல் வேண்டும்.
தொற்றுக்குள்ளான தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்ப்பதே சிறப்பு. தாய்ப்பாலுக்கு பதிலாக சுத்தமான மாற்றுணவை வழங்குவதே பொருத்தமானது.
எச்.ஐ.வி. தொற்றடைந்த குழந்தைகள் பல நோய்களுக்கு ஆளாகும் ஆபத்துள்ளது. எனவே, குழந்தைகளுக்குரிய முக்கூட்டு, போலியோ, சின்னமுத்து ஆகியவற்றுக்குரிய மருந்துகளை உரிய காலங்களில் கொடுப்பது அவசியம். எச்.ஐ.வி. தொற்றுள்ள பிள்ளைகள் சின்னமுத்து தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கின்றனர்.
எமக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது என அறிந்து கொள்ளும் எவர் மனதிலும் பல சோகவுணர்வுகள் உருவாகும். அதிர்ச்சி, குரோதம், சந்தேகம், வெட்கம், கோபம் மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவோமோ என்ற அச்சம், படிப்பு, மரணம் குறித்த அச்சத்துடன் மனவேதனையையும் அனுபவிக்கும் நிலையும் ஏற்படும்.
இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் மேலும் துரிதமாக எயிட்ஸ் நிலைக்கு இட்டுச் செல்லப்படலாம். எனினும், இந்நிலையை மாற்றி சமூகத்தில் சாதாரண வாழ்க்கையை வாழ நாம் அவருக்கு உதவிட வேண்டும். அவர் மீது நாம் காட்டும் அக்கறை அவசியம். இங்கு கூட்டுப்பொறுப்பு அவசியம். இதுபற்றிய சாதகமனப்பான்மை அவசியம்.
இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றடைந்த ஒருவர் ஊட்டமிக்க உணவு உட்கொண்டு முறையான உடற்பயிற்சி செய்து, புகைப்பிடிப்பதையும் மதுபானம் அருந்துவதையும் நிறுத்தி, நெருக்கடி மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். மேலும், தம்மிடமிருந்து மற்றயவர்களுக்கு எச்.ஐ.வி.தொற்றும் வாய்ப்பை இல்லாதாக்கி,ஏனைய நோய் தொற்றுகளிலிருந்து தன்னை பாதுகாத்து வைத்திய ஆலோசனையை கடைப்பிடித்தல் வேண்டும்.
அத்துடன், எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்கள் உடன்பாடான வாழ்க்கை கோலத்திற்கு இசைவடைதல் வேண்டும். அவர்களது வாழ்க்கைக்கு தேவையான உள மற்றும் சமூக சூழ்நிலை உருவாக்கப்படல் வேண்டும். அப்போது தான் நீண்டகாலம் வாழ்வதற்குரிய உரிமையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்பதை நாம் சகலரும் நினைவில் வைத்திருத்தல் நல்லது.
தகவல்கள் பெற http://www.aidscontrol.gov.lk/me/PMIS/index.jsp#
(நன்றி/தினக்குரல்)
1 comment:
so nice keep it up.... it will be more nice if you add more "kavithai"
Post a Comment