கலை - இராகலை   »   எனது வலைப்பூவிற்க்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - மலையகம் - மலையக நாட்டார் பாடல்கள்
தேடிச் சோறு நிதம் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" ‍‍‍
-பாரதி

Sunday, November 9, 2008

சில முகங்களும் பல முகமூடிகளும்திரு.மை.பன்னீர்செல்வம் என்ற பெயரை சமூகத்தில் தனது முதலாவது கவி நூலான் "ஆறு ஐந்தாய் மாறும்" என்ற கவிதை நூலின் மூலம் முத்திரை குத்திகொண்டவர். அந்த நேரம் இவர் எனது வகுப்பாசிரியர்.எனக்கு கல்வி கற்று தந்த குரு.இவரது இரண்டாவது கவி நூலாக "சில முகங்களும் பல முகமூடிகளும்" என்ற் நூலை 02.11.2008 அன்று இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (எனது பாடசாலை)வெளியிட்டார். இவர் படித்த பாடசாலை மட்டுமன்றி உப அதிபராக பணியாற்றும் பாடசாலையும் கூட. இவர் ஒரு சகலகலா வல்லவர் என கூறிக்கொள்வதில் நானும் எனது சக நண்பர்களும் பெருமை கொள்கின்றோம். இன்னும் பல கவிதை நூல்களை மலரவிடவேண்டும் என வாழ்த்த வயதில்லாமல் வணங்குகின்றேன்.
இந்நூலின் கவிதைகளை அவரது அனுமதியுடன் எனது வலைப்பூவில் மலரவிடபோகின்றேன். அவரின் கருத்துப்படியே இந்நூலில் ஏதாவது குற்றம் இருப்பின் யாரும் பொருத்தருளத் தேவையில்லை.பொங்கி எழுந்து நெற்றிக்கண் திறத்து சுட்டிகாட்டவும்.
திரு.மை.பன்னீர்செல்வம்.
27, சென்லியனாட்ஸ் பசார்,
இராகலை.
ஹள்கரனோயா.
இலங்கை.

சில முகங்களும்
பல முகமூடிகளும்

பொய் விதைத்து பொய் அறுக்கும்
உலகில்
போலி முகம் பார்த்து
மெய் வியர்த்து!

முகத்திற்குள் முகம் மறைத்தவர்
அவர் தம் முகத்திரை கிழித்த போது
அதிர்ந்தது!

முகத்திற்குள் இத்தனை முகங்களா?
இங்கோ!
சிலருக்குத்தான் முகங்கள்
பலருக்கு முகமூடிகள்

சமுகமாற்றத் தீ வளர்த்து
குளிர்காய சிலர் முனைந்த போது

முகமூடி மனிதர்களோ;
வார்த்தைக்கு சாயம் பூசி
வதனத்திற்கு வேசம் பூசி
சுயயுத்தி நோக்கி
சுரண்டும் மார்க்கம் தேடினர்
சமுகசேவை முகத்தோடு.

முகத்திற்குள் இத்தனை முகங்களா?
இங்கோ!
சிலருக்குத்தான் முகங்கள்
பலருக்கு முகமூடிகள்

உள்ளே பூகம்பம், முகத்தில் புன்னகை.
உள்ளே சாந்தம்,முகத்தில் யுத்தம்.
உள்ளே மிருகம், முகத்தில் தெய்வம்.
உள்ளே கல்யாணி, முகத்தில் முகாரி.

சிரிப்பை மறைத்து அழுகை காட்டும்,
கண்ணிர் மறைத்து புன்னகை காட்டும்,
உள்ளே கனன்று, வெளியே சிரித்து,
மனதில் குமறி முகத்தில் மலர்ந்து

முகத்திற்குள் இத்தனை முகங்களா?
இங்கோ!
சிலருக்குத்தான் முகங்கள்
பலருக்கு முகமூடிகள்

முகங்களை மறந்து
முகவரிகளை பத்திரப்படுத்தும்
உலகில்
உண்மை முகம் தேடி
பயணித்த போது
பதிந்தன சில!

உண்மையாய், பொய்யாய்,
நடிப்பாய், வேசமாய்!

சுயமாய், வெள்ளையாய்,
சிவப்பாய்,பச்சையாய்!

கனவாய், நனவாய்,
மாயமாய், விம்பமாய்!

முகத்திற்குள் இத்தனை முகங்களா?
இங்கோ!
சிலருக்குத்தான் முகங்கள்
பலருக்கு முகமூடிகள்

திரு.மை.பன்னீர்செல்வம்
நூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.

No comments:

.